இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது காணப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இச் சட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பாதிக்கப்பட்டோர் மின்னஞ்சல் மூலம் தமது புகாரினைப் பதிவு செய்ய முடியும் எனவும், இதற்கான எப்.ஐ.ஆர் நகலை பாதிக்கப்பட்டோர் இணையம் ஊடக பதிவிறக்கம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மின்னஞ்சல் மூலம் உரியவருக்கு சம்மன் அனுப்ப முடியும் எனவும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பொலிஸ் நிலையத்திலும் மின்னஞ்சல் ஊடாகத் தமது புகாரினை அளிக்க முடியும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் தேவைப்படும் போது மாத்திரம் சென்றால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும் எனவும், பாதிக்கபட்டோருக்கு உரிய விரைவான தீர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் உள்ள 17,500 பொலிஸ் நிலையங்களில் இச்சட்டமானது இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.