கடன்மறுசீரமைப்பின் ஊடாக மீண்டும் சர்வதேசத்தில் இலங்கையின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்
கடன்மறுசீரமைப்பு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் கடந்த காலங்களில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு கடந்த 16 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடியிருந்த போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவில்லை.
நாடு பெற்றுக்கொண்ட கடனை மீளசெலுத்தாமையினாலேயே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
எமது நாட்டை பொறுத்தவரையில் நூற்றுக்கு 75 வீத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வர்த்தகமுறைமை காணப்படுகின்றது.
ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் இரண்டு வாரங்களுக்கு ஸ்தம்பிதமடைந்தால் முழு வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்படும். எனவே கடன்மறுசீரமைப்பின் ஊடாக மீண்டும் சர்வதேசத்தில் இலங்கையின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளுடன் நம்பிக்கையுடன் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கான சூழ்நிலை ஏற்படும்.
இதன்பலாபலன்கள் நாட்டு மக்களை சென்றடையும். இலங்கையில் இடைநடுவில் கைவிடப்பட்ட வர்த்தக திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன” இவ்வாறு ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.