இந்தியாவின் உத்தர பிரதேசம், புல்ராய் கிராமத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 122 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய சொற்பொழிவை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு நிறைவடைந்ததையடுத்து மக்கள், போலே பாபா அமர்ந்திருந்த காலடி மண்ணை எடுக்க முயன்றுள்ளனர்.
மேலும் , சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் போதே சனநெரிசலினால், ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ ஆரம்பித்துள்ளதாக அங்கு இருந்த மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிக்குண்டு பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட 122 பேர் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர் என்றும், குறித்த பிரதேசத்தில் இருக்கும் வைத்தியசாலையில் ஒரு மருத்துவரே சிகிச்சையளிக்க இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவமானது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலே பாபா தற்போது தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.