தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டங்களை ஆரம்பித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரண்டு வருடங்களுக்கு முன்னர் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தார்.
ஆனாலும் இந்தப் பிரச்சினை இன்னும் முடிந்துவிடவில்லை. தற்போது வெளிநாட்டுக் கடனை அடைக்க 2027 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 500 கோடி டொலர்கள் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது.
இலங்கை மக்களுக்கு வாழ்வளித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களை ஆரம்பித்து நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்குகளை பொருளாதார பரிமாற்றச் சட்டம் வழங்கியுள்ளது.
அதன்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சி 5 வீதம் என்ற இலக்கில் பேணப்பட வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ளது. இத்துடன் நின்றுவிடாமல் ஜனாதிபதி, 2030ஆம் ஆண்டிலும், 2042ஆம் ஆண்டிலும் யார் நாட்டை ஆட்சி செய்தாலும் அந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பு, சட்டமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை ஏமாற்றும் குழுக்களையும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் குழுக்களையும் பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும். இந்த முறை மீண்டும் ஒரு தவறை செய்தால், அந்தத் தவறை மீண்டும் மாற்ற முடியாத கடுமையான தவறாகிவிடும்.
எனவே, நாம் இப்போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தற்போது சில தரப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற முடியாததால், அவர்களின் தனிப்பிட்ட வெற்றிக்காக நாட்டை சீர்குலைக்க தயாராகி வருகின்றனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின்
18 வீத வெட் வரி 21 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், உழைக்கும் மக்களின் தேநீர் கோப்பையினதும், அரிசி பொட்டலத்தினதும் விலைகள் அதிகரிக்கும்.
அவ்வாறு நடந்தால், வங்குரோத்தான நாடு மீண்டும் அதனை விட ஆபத்தான நிலைக்குச் செல்வதைத் தடுக்க முடியாது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.