அரசியமைப்பிற்கு அமைவாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பறிக்க முடியாத இறையாண்மை மற்றும் வாக்குரிமை நடைமுறையில் மக்களால் பரிசோதிக்கப்படும் பிரதான தேர்தலான ஜனாதிபதி தேர்தல் எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படக்கூடாது என எதிர்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, முடியுமான முதலாவது சந்தர்ப்பத்திலேயே தமக்கான நிறைவேற்று அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு மக்கள் விருப்பத்துடன் புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பு சதிகளின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு விடுக்கப்படும் அழுத்தங்களை தடுக்குமாறும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சுயாதீன எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரின் கையொப்பத்துடனான கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக தோல்வியடைய கூடும் என அச்சத்திலுள்ள தற்போதைய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பல்வேறு உத்திகளை கையாண்டு ஒத்திவைப்பது முயற்சிப்பது இரகசியமல்ல எனவும் அந்த கடித்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த செயற்பாட்டின் மற்றுமொரு உத்தியாக தற்போது தெளிவாக உயர்நீதிமன்றம் பொருள் கோரல் செய்துள்ள தற்போதைய ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் அரசியல் அமைப்பு ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை கொண்டு வருவதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைய மக்கள் கருத்து கணிப்பு நடத்த தேவை ஏற்படுவதுடன், இதனால் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் மக்கள் கருத்து கணிப்பை நடத்துவதன் மூலம் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரயத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.