ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் எனவும் அதற்கான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் புதிய முதலீடுகளை ஸ்தாபிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
பிங்கிரிய ஏற்றமதி வலயம் முழுமைபடுத்தப்பட்டதன் பின்னர் 2600 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்ப்பதோடு 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம் மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது ஏற்றுமதி வருமானத்தைவிட இறக்குமதி செலவு அதிகமாக உள்ளதாகவும் இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் இன்னும் பதினைந்து வருடங்களில் மீண்டும் வங்குரோத்து நிலைவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாதுகாத்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதுடன், ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.