வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுவதால், விலைமனுக்கோரல் விடயத்தினை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அரச நிதி தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச நிதி தொடர்பான குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் சேவையை வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆனால் அந்த சேவை வி.எப்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. மாறாக ஜி.பி.எஸ் என்று கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு கூட்டு நிறுவனத்துக்கு பொறுப்பாக்கியமை தொடர்பில் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதாகவும், இவ்விடயம் குறித்து அரச நிதி தொடர்பான குழுவில் விசாரணைகளை மேற்கொண்ட போது பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விசா கட்டணம் குறித்து பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாகவும், ஒரு இடத்தில் 18.5 டொலர் என்றும் பிறிதொரு இடத்தில் 7.2 டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர்,
இந்த செயற்திட்டம் 200 மில்லியன் டொலர் முதலீடு என்று அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், முன்னெடுத்த விசாரணைகளில் 200 மில்லியன் டொலர் அல்ல 200 மில்லியன் ரூபா என்று கூட குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தரவுக் கட்டமைப்பின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு உண்டு என்றாலும், இரகசிய தரவுகள் எவ்வாறு வெளியானது என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.