தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டு தாம் அஞ்சப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம் பென்சில்வேனியாவில் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றிய வேளை மர்ம நபர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த ட்ரம்ப் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் 20 வயதுடையவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் கூரையொன்றின் மீது பதுங்கியிருந்த நிலையில் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பிற்கு பாதுகாப்பு வழங்கிவந்த இரகசியதுறை அதிகாரி நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில், குறித்த துப்பாக்கிதாரி ஸ்தலத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவரும் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ” இந்த தருணத்தில் அணைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் எந்த அச்சுறுத்தலுக்கும் தான் பயப்படப் போவதில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இவ்வாறான வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.