மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத திமுகவின் திராவிட மாடல் அரசு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அதன்படி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.