இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை பெங்களூர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம் சமுகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்களை தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றது.
இதன்போது, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்கள் வாக்காளர்களுக்காக பிரசாரம் செய்தனர்.
அதன்படி ராஜஸ்தானில் பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அவர்கள் நாட்டின் வளங்களை முஸ்லிம் சமூகத்திற்கு பிரித்து கொடுப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகின்றது.
பிரதமர் மோடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மோடிக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி ஒரு சமூகத்தை தாக்கி பேசியதாக, பெங்களூரைச் சேர்ந்த ரகுமான் என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சிவக்குமார், பிரதமர் நரேந்திர மோடியின் குறித்த கருத்து பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அறிவித்து, இந்த வழக்கை இரத்து செய்வதாக உத்தரவிட்டார்.