தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் தங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் குறித்தான விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புளொட் அமைப்பின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் முடிந்து விட்டது. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்த காரணம் இன்றும் மாறாது அப்படியே இருக்கின்றது.
மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதை பார்க்க கூடியதாகவுள்ளது என தெரிவித்தார்.
மேலும், சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என நீண்டு செல்வதாகவும், அண்மைக் காலமாக இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா என பல நாடுகளுக்கு அதிகளவில் மக்கள் சென்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த நிலை தொடருமானால், தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்திற்கும் கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்தாலும், ஒரு இனமாக பார்க்கின்ற பொழுது இது ஒரு பின்னடைவு என சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது ஜனாதிபதி கூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் என கூறுவதாகவும், அவர்களிடம் இருக்கக் கூடிய அந்த பொருளாதரா பலத்தை இங்கு கொண்டு வரலாம் எனவும் சிந்திக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை கொடுக்க தயாரில்லை என சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.