”தேர்தல்கள் ஆணைக்குழு நீதியான தேர்தலை நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கண்டி நகரில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் ஒன்று இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி பல விதமான சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
கடந்தபல வாரங்களாக அவர் அதனையே செய்து வந்தார். மிகவும் சூட்சுமமான முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டார்.
அதுபோலவே இன்று ஜனாதிபதித் தேர்தலை இறுதி நேரத்திலாவது நிறுத்தமுடியுமா என எண்ணுகின்றார்.
தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை. அதாவது தேர்தல் திகதியை அறிவிக்கவில்லை வேட்பு மனுக்கள் கோரப்படவும் இல்லை.
எனவே தேர்தல்கள் ஆணைக்குழு நீதியான தேர்தலை நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.