பிரித்தானியாவில், ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரிடம் விளம்பரம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மர் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை இரத்து செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து, சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய உதவும் ஆட்கடத்தல் கும்பல்கள், “இனி பிரித்தானியாவலிருந்து நாடு கடத்தப்படமாட்டீர்கள்” என விளம்பரம் செய்து வருவதாக தெரிய வருகின்றது.
அண்மையில் சமூக ஊடகமான டிக்டொக்கில் வெளியான சோமாலிய மொழி விளம்பரம் ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய விரும்பும் சோமாலியர்களைக் குறிவைத்து, “ருவாண்டா திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி ஒருவர் கூட நாடு கடத்தப்படமாட்டீர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், “எங்களுடன் பயணித்தால் நீங்கள் பிரித்தானியாவில் இருக்க முடியும்” எனவும் குறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பாதுகாப்பாக பிரித்தானியாவுக்குள் அழைத்துச் செல்ல, 2,500 பவுண்டுகள் கட்டணம் எனவும் அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.