சமூக வலைத் தளத்தில் விடுக்கப்பட்ட சவாலுக்காக, இடைவிடாது சுமார் 10 மணிநேரம் உணவருந்திய யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பான் ஜோதிங் என்ற 24 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடு கொண்ட குறித்த யுவதி, பலதரப்பட்ட உணவுப்பண்டங்களை உட்கொண்டு அதனைக் காணொளியாகப் பதிவேற்றி வருகின்றார்.
சில நேரங்களில் அவர் 10 கிலோவுக்கும் மேற்பட்ட உணவை உட்கொள்வார் எனவும் இதனால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் அவர் சமூக வலைத் தளத்தில் விடுக்கப்பட்ட சவால் ஒன்றுக்காக 10 மணிநேரம் உணவருந்தியுள்ளார். இதன்போது உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டமையினாலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை முடிவுகளில் அவரது வயிறு கடுமையாக சிதைவடைந்து காணப்பட்டிருந்ததாகவும், அவரது வயிற்றில் செரிக்கப்படாத உணவு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.