பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமைக்கு மிகவும் வருந்துவதாக தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டிலும் வன்முறைச் சூழல் உருவாகியிருந்ததாக அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், பங்களாதேஷ் அளவிற்கு நாட்டை வீழ்ச்சியடைய விடாமல் மிகக் குறுகிய காலத்தில் நாட்டை ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பங்களாதேஷில் தற்போது 2835 இலங்கைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், எந்தவொரு இலங்கையர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு தலையிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.