83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..??
கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள்.
தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும்.
நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது.
1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு ஜூலை என பிரகடனப்படுத்தியுள்ள, இந்த பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்த்தினர் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது.
நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள், மற்றும் அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்து கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதன்முறையாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இனகலவரம் அரங்கேற்றப்பட்டது.
இந்த இனகலவரம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை வலுவாக தோற்றுவித்தது.
1983 ஜூலை 23 ஆம் திகதியன்று அதிகாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவச் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் அதிகமான ஒன்றுகூடியிருந்தனர்.
அதனால் கொழும்பில் 41 வருடங்களுக்கு முன்னர் இதே ஒரு நாளில் பதற்றமும் நிலவியது.
இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானது.
கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, வீடுகள், மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் எரிக்கப்பட்டன.
நிலைமை மோசமடைந்ததை போதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது.
கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என வர்னிக்கப்படுகின்ற இந்த கலவரத்தை இன்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.