பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக இவ் வருடம் கடந்த ஆறு மாதங்களில், 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான முறைப்பாடுகள், கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலிருந்தும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் மாதந்தம் கிடைக்கப்பெறுவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே 2023 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 500 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்தாண்டில் மாத்திரம் 488 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 52 கொலை சம்பவங்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை, நுகேகொட, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், தங்காலை பிரதேசத்தில் மாத்திரம் 32 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தேசிய தணிக்கை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றச் செயல்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.