ஜனாஸா எரிப்பு தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடாத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அநீதியான சம்பவத்தை செய்த குழுவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகரிடம் சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் கோரியுள்ளார்.
அத்துடன், இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் மகஜரொன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மகஜரில் உடல் உறுப்புகளை தகனம் செய்தல் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்ட விதிமுறைகள் மற்றும் கொரோனா சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்றமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு போன்று ஜனாஸா எரிப்பை விசாரிக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு வேண்டும் என முஸ்லிம் எம்.பி.க்கள் கூட்டு கோரிக்கையை இதுவரை முன்வைக்காமை வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.