இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதியிலுள்ள மண்டி – பதாரில் மேக வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பல்வேறு இயற்கை காரணிகளால், மேகம் ஒரே சமயத்தில் அதிகளவான நீரைக் கொட்டும் நிகழ்வு அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. அவ்வாறு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேக வெடிப்பு காரணமாக பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா, உத்தரகாண்ட், அரித்துவாரில் தொடர்ந்தும் கன மழை பெய்து வரும் நிலையில், பார்ப்பூர் என்ற கிராமத்தில் நேற்று மாலை வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இதில் பலர் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சுமார் 200 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலச்சரிவால் வயநாடு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த நிலச்சரிவு குறித்து ஜூலை 23ஆம் திகதி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.