ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஈரான் தலைவர் அலி கமெனி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் புதிய ஜனாதிபதி மசூட் பெஸஷ்கியனின் (Masoud Pezeshkian) பதவியேற்பு நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற நிலையில், இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மயில் ஹனியே (Ismail Haniyeh) கலந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த கட்டத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொது மக்களின் சொத்துக்கள் இதனால் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் பொறுப்புக்கூறாத வகையில், இது சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் தலைவர் அலி கமெனி (Ali Khamenei), இதற்கெதிராக இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்துமாறும், அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறும் ஈரான் படைகளுக்கு கமெனி மேலும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஈரான் பாதுகாப்புச் சபையை கூட்டிய அவர், போர் நடவடிக்கைகள் குறித்து படைப் பிரதானிகளுடன் கலந்துரையாடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஈரானின் பதில் தாக்குதல் எவ்வளவு வலிமையாக இருக்கும் என்று அறிவிக்க முடியாது என்றும் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே இந்தத் தாக்குதல் கட்டமைக்கப்படும் என்றும் ஈரான் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை கூட்டாக மேற்கொள்ள தனது நட்பு நாடுகளான ஏமன், சிரியாவுடன் தற்போது ஈரான் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டமைக்கு இஸ்ரேலே காரணம் என ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், தனது எதிரிகளை வெளிநாடுகளில் படுகொலை செய்த வரலாறு இஸ்ரேலுக்கு கடந்த காலங்களில் இருப்பதால், இஸ்ரேலே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கும் என்று சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.