அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்சித்திருந்தார்.
அத்துடன் ” கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என்பது தெரியவில்லை எனவும் அவர் வெளிப்படையாக இல்லை எனவும்” குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்,குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கமலா தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், அது அவரது சொந்த முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ”கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும் எனவும், அவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.