மொராக்கோவில் நடந்த 2025 ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் செனகலின் தெரெங்கா லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு (Pape Thiaw) ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) கடுமையான தடைகளை விதித்துள்ளது.
2026 ஜனவரி 18, அன்று ரபாத்தில் அமைந்துள்ள பிரின்ஸ் மௌலே அப்தெல்லா மைதானத்தில் நடைபெற்ற 2025 ஆப்பிரிக்கா கிண்ண இறுதிப் போட்டியின் போது விளையாட்டு ரீதியாக மோசமாக நடந்து கொண்டதற்காக பேப் தியாவ் 5 போட்டிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 100,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரபாட்டில் நடந்த ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மொராக்கோவிற்கு நடுவர் பெனால்டி வழங்கியதைத் தொர்ந்து, தியாவ் தனது வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறச் சொன்னதை அடுத்து, அவர் நியாயமான விளையாட்டு மற்றும் நேர்மையின் கொள்கைகளை மீறியதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்குமுறை வாரியம் தீர்ப்பளித்தது.
செனகல் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு அறிவித்த விரிவான ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தடைகள் இருந்தன.














