வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ”என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், சிறார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்படும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முகாம்களில் இருக்கக்கூடும். அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
சூழ்நிலை சரியில்லாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.