கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டுள்ளாா்.
இதன்போது முகாம்களில் தங்கியுள்ளவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து பிரதமா் மோடி ஆறுதல் கூறியிருந்ததுடன், கேரள அரசுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவா்உறுதி அளித்தார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்ததுடன், அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ஹெலிகாப்டரில் புறப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்திருந்தாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் சென்றிருந்தனா்.
இதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, மாநில அமைச்சர்கள் ஏ.ராஜன், ஏ.கே.சசீந்திரன், பி.ஏ.முகமது ரியாஸ், மாநில ஏடிஜிபி அஜித் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்பு மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.