ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜபக்சக்களின் வேட்பாளராக களமிறங்குவதை விடவும் ராஜபக்சக்களின் ஆட்களுக்கு தான் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது.ரணில் ராஜபக்சக்களின் கட்சியைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். கட்சியைக் காப்பாற்றவும் ரணிலுடன் தமது பேரத்தைப் பலப்படுத்தவும் இளைய ராஜபக்சவாகிய நாமல் களமிறக்கப்படுகிறாரா? அவர் இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் கட்டுப் பணம் செலுத்திதியிருக்கவில்லை.
ராஜபக்சக்களின் வேட்பாளராக களம் இறங்கினால் தனக்கு பின்வரும் பிரதிகூலங்கள் உண்டு என்பது ரணிலுக்கு நன்றி தெரியும்.
முதலாவது, அவர் ராஜபக்சகளோடு சேர்த்து பார்க்கப்பட்டால் மேற்கு நாடுகள் அவரிடம் இருந்து சிறிது விலகித்தான் நிற்கும். ஏன் என்றால் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ராஜபக்சவை ஒரு விருப்ப தெரிவாகப் பார்க்கவில்லை. தவிர பன்நாட்டு நாணய நிதியமும் அப்படித்தான் சிந்திக்கின்றது. அனைத்துலக அளவில் ராஜபக்சக்கள் இப்பொழுதும் விருப்பத்தெரிவாக இல்லை. சீன விரிவாக்கத்தின் கருவிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.
மிகக்குறிப்பாக கடந்த வாரம் பங்களாதேஷில் இந்தியாவுக்கு அதிகம் இணக்கமான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு விட்டது. ஏற்கனவே மாலைதீவுகளில் இந்தியாவின் பிடி, பலவீனமடைந்து விட்டது. பங்களாதேஷிலும் நிலைமைகள் நிச்சயமற்றவைகளாகவே தெரிகின்றன. எனவே இந்தியா இலங்கையில் மீண்டும் சீன விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதை விரும்பாது.
இப்படிப் பார்த்தால் ராஜபக்சகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு ஜனாதிபதியை இந்தியா விரும்பாது. அமெரிக்கா விரும்பாது. மேற்கு நாடுகள் விரும்பாது. பன்னாட்டு நாணய நிதியமும் விரும்பாது. உலக வங்கியும் விரும்பாது.
இரண்டாவது பிரதிகூலம், ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து துரத்திய மக்கள் போராட்டக்காரர்கள் இப்பொழுது தேர்தல் கேட்கின்றார்கள். அவர்கள் தேர்தலில் பெரு வெற்றி பெறப் போவதில்லை. எனினும் சில ஆண்டுகளுக்கு முன் மக்களால் துரத்தியடிக்கப் பட்டவர்களின் பொது வேட்பாளராகக் களம் இறங்கினால் படித்த சிங்கள இளையோரின் வாக்குகளை இழக்கக்கூடிய ஆபத்து அதிகரிக்கும்.
மூன்றாவது பிரதிகூலம், ரணில், ராஜபக்சக்களோடு சேர்த்துப் பார்க்கப்பட்டால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.முஸ்லிம்களும் பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
எனவே ராஜபக்சக்களிடம் இருந்து விலகி நிற்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று ரணில் எதிர்பார்க்கிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டிருக்கிறார் என்று ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கும் நம்புகின்றது என்று ரணில் நம்புகின்றார். ராஜபக்சக்களிடம் இருந்து விலகி நின்றால் தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் அதிகமாகச் சேகரிக்கலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார்.அதனால்தான் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகிறார்.முன்பு சஜித்துக்கு தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கத் திட்டமிட்ட தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தன்னை நோக்கித் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் உண்டு.
இனி வரும் நாட்களுக்குள் மேலும் புதிய சேர்க்கைகளுக்கும் விலகல்களுக்கும் கட்சித் தாவல்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இப்பொழுதும் ரணிலின் ஆட்பலம் ராஜபக்சகளின் கட்சியில் இருந்து கழட்டி எடுக்கப்பட்டவர்கள் தான்.ஒற்றை யானையாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர் இப்பொழுது 90க்கும் அதிகமான தாமரை மொட்டுக்களைப் பிடுங்கி எடுத்து விட்டார். இன்னும் எத்தனை பேரைப் பிடுங்கி எடுப்பார்? வேறு எந்த எந்தக் கட்சிகளில் இருந்து பிடுங்கி எடுப்பார் ? என்பவையெல்லாம் இனிவரும் நாட்களில் தெரியவரும். பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் மேலெழுந்தாலும் அவருடைய அடிப்படைப் பலம் தாமரை மொட்டுக் கட்சிதான். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டதாகக் கருதும் நடுத்தர வர்க்கத்தின் வாக்கு தீர்மானகரமானது அல்ல. எனவே இப்பொழுதும் ரணிலின் பலம் ராஜபக்சக்கள் தான்.ஆனால் ராஜபக்சக்களை வெளியே தள்ளிவிட்டு அவர் ராஜபக்சக்களின் ஆட்களைத் தன்வசப்படுத்தி விட்டார். வெளித்தோற்றத்துக்கு அவர் ராஜபக்சகளோடு இல்லை என்று தோன்றலாம். ஆனால் அவருடைய அடிப்படைப் பலமே ராஜபக்சக்களின் கட்சிதான்.
அது ராஜபக்சகளின் தந்திரமாக இருக்கலாம் என்ற ஊகமும் உண்டு.ரணிலை வெற்றி பெற வைப்பதற்காக அவர்கள் அவ்வாறு ஒதுங்கி நிற்பதாகவும் சில ஊடகவியலாளர்கள் ஊகிக்கின்றார்கள்.ஆனால் அப்படி ஒரு தந்திரத்துக்காக தமது கட்சியைப் பலியிட ராஜபக்சக்கள் தயாரா?
கடந்த சில வாரங்கள் வரையிலும் தேர்தல் களத்தில் அனுரவும் சஜித்தும்தான் முன்னணியில் நின்றார்கள். மெய்யான போட்டி அனுரவிற்கும் சஜித்துக்கும் இடையில் என்றுதான் அபிப்பிராய வாக்கெடுப்புகள் தெரிவித்தன.இலங்கை போன்ற நாடுகளில் அபிப்பிராய வாக்கெடுப்புகள் திருத்தமாக அமைவது குறைவு. ஆனால் இந்தியாவில் சில பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் நடாத்தும் அபிப்பிராய வாக்கெடுப்புகள் மிகத் துலக்கமானவைகளாக அமைவதுண்டு.
இப்பொழுது கிடைக்கும் செய்திகளின்படி சஜித்தும் அனுரவும்தான் முன்னணியில் நிற்கின்றார்கள். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் வெற்றிகளை கடைசி வாரங்கள், அல்லது கடைசி நாட்கள் தீர்மானிக்க முடியும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நிகழக்கூடிய திருப்பகரமான சம்பவங்கள் வெற்றியின் போக்கைத் தீர்மானித்து விடும்.
எனவே நாடு அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் நாட்களுக்குள் நுழைந்து விட்டது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்ட பின்னரான கடந்த பல தசாப்தங்களில்,பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாகக் கட்டுப்பணம் செலுத்தியது என்பது இதுதான் முதல் தடவை. ஒரு சுயேட்சையாக கட்டுப் பணம் செலுத்தியவர் பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி பெறுவாராக இருந்தால்,நாமலும் கட்டுப் பணம் செலுத்துவராக இருந்தால்,தேர்தலில் நான்கு முனைப் போட்டிகளுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றனவா?