கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் மற்றும் பொது மக்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்போராட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று(17) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த 24 மணிநேரத்தில் அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெறும் எனவும், வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.