சர்வதேச எரிசக்தி வலையமைப்பில் இலங்கையை இணைப்பதன் ஊடாக இலங்கையின் மிகப்பெரிய பசுமை மூலங்களை பயன்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நிலையான எரிசக்தி வழங்கல் மிகவும் முக்கியமானது. எமது கூட்டு முயற்சிகள் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதில் முழு நம்பிக்கை எமக்கு உள்ளது.
இந்த முயற்சியானது, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது. ஆற்றல் செலவினங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி வலையமைப்பில் இலங்கையை இணைத்துள்ளோம். இதன் ஊடாக பிரதான எரிசக்தி பரிமாற்ற மத்திய நிலையமாக இலங்கையின் மிகப்பெரிய பசுமை மூலங்களை பயன்படுத்த முடியும்.
இதனால் நாட்டிற்கான புதிய முதலீட்டை ஈர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எங்கள் தற்போதைய திட்டங்களில் எரிசக்தி வலையமைப்பு இணைப்பு, உட்கட்டமைப்பு இணைப்பு மற்றும் பல்உற்பத்திக் குழாய்களை நிறுவுதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
சம்பூரில் சூரிய சக்தி மின் திட்டம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களிலும் முதலீடு செய்து வருகிறோம்” இவ்வாறு இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.