அரசநிதியைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வோர் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிரதமரிடம் நான் இந்த விடயத்தை வினவுகின்றேன். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் அரசநிதியை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட வேண்டும். அது சட்டவிரோதமான செயலாகும்.
ரிஷாட் பதியூதினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை இடைநிறுத்தியுள்ளார்கள். அவர் தேர்தலில் எம்முடன் கூட்டணி அமைத்துள்ளமையினால் அவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டார்கள்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு தற்போது புதிதாக 300 மில்லியன் ரூபாவினை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளனர்.
இது எந்த வகையில் நியாயமாகும் என கேட்க வினவுகின்றேன். தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் சட்டவிரோத செயற்பாடுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.