மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதை அறிந்த பொதுமக்கள் நேற்று பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களில் 17 பொலிஸார் உட்பட 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கூடுதல் பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழலையர் பள்ளிச் சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பாடசாலையின் உதவியாளரை பொலிஸார் ஆகஸ்ட் 17-ம் திகதி கைது செய்தனர். பாடசாலையின் கழிவறையில் அவர் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியாதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெண் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதேபோல் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்கும் பணியில் தவறியதாக மூத்த காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளை மாநில அரசு நேற்று பணிநீக்கம் செய்துள்ளது.