பாகிஸ்தானில் இருந்து ஷியா யாத்ரீகர்கள் 51 பேரை ஏற்றி கொண்டு ஈரான் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேருந்தானது, மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் பகுதியில் வைத்து நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில், 35 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேரளவில் காயமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர் என்றும் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகம் ஊடாக இறந்தவர்களின் உடலை பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.