பங்களாதேஸ் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவின் முன்னாள் நீதிபதி சம்சுதீன் சௌத்ரி மாணிக் பங்களாதேஸ் சில்ஹெட்டில் உள்ள கனைகத் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் தப்பிச்செல்ல முற்பட்ட போது கைது செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவாமி லீக் தலைவர் ஏஎஸ்எம் . பிரோஸ் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகி சிறிது நேரத்தில் முன்னாள் நீதிபதி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, நேற்றிரவு எல்லையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதியை இரவு முழுவதும் அங்குள்ள நிலையத்தில் கண்காணிப்பில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடஒதுக்கீடு தொடர்பான வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில் அவர் ஆகஸ்ட் 5 அன்று இந்தியாவிற்கு தப்பி சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஆகஸ்ட் 8 அன்று இடைக்கால அரசின் தலைமை பொறுப்பையேற்றிருந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல், பல முன்னாள் அமைச்சர்கள் உள்பட, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அனிசுல் ஹுக் மற்றும் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் சல்மான் எப் ரஹ்மான் ஆகியோர் தாக்காவில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.