மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழக்கும்போது குறித்த பெண் கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, அக்குரஸ்ஸ, பிடபெத்தர, பகுதியிலிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஆசிரியரான 32 வயதுடைய குறித்த பெண், தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கையிலேயே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
மெதேரிபிட்டிய பாடசாலையில் கடமையாற்றிய இவர், இடமாற்றம் செய்யப்படடதையடுத்து நேற்று இவருக்கான வழியனுப்பல் நிகழ்வு நடைபெற்றதை அடுத்து, வீடு நோக்கி பயணிக்கும்போதே விபத்து நேர்ந்துள்ளது.
பிடபெத்தர பகுதியிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கி இவர்கள் பயணித்திருந்த நிலையில், எதிர்த் திசையில் வேகமாக வந்த வேன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியரும் அவரது கணவரும், அயலவர்களால் காப்பாற்றப்பட்டு அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஆசிரியர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது கணவர் மேலதிக சிகிச்சைக்காக காலி, காராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆசிரியர் கர்ப்பிணியாக இருந்துள்ள நிலையில், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















