மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, தபாலட்டைகளை அனுப்பும் செயற்பாடு நேற்று மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்துமாறுக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையிலேயே, இவ்வாறு தபாலட்டைகளை அனுப்பும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய தபாலட்டைகள் நேற்று மாலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட நிலையில், இந்த தபாலட்டைகள் மன்னார் தபாலகம் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புதிய ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது மன்னார் தீவில் அமைக்கப்படும் காற்றாலை மின்சார திட்டத்தை தான் ஜனாதிபதியாக வந்தால் நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.