முல்தானில், புதன்கிழமை (09) பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு பரபரப்பான சதத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து நட்சத்திரம் ஜோ ரூட், அதிக டெஸ்ட் சதங்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்திற்கு முன்னேறினார்.
பாகிஸ்தானின் யூனிஸ் கான், இந்தியாவின் சுனில் கவாஸ்கர், மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா மற்றும் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனா ஆகியோர் பெற்ற 34 டெஸ்ட் சதங்களைத் தாண்டிய வலது கை வீரரின் 35 ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும்.
அது மாத்திரமன்றி நேற்றைய தினம் ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகளவான ஓட்டங்களை குவித்த 5 ஆவது சர்வதேச வீரரும் ஆனார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் மொத்தமாக 12,578 ஓட்டங்களை குவித்திருந்தார்.
முல்தானில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டமான நேற்றைய தினம் ரூட் ஆட்டமிழக்காமல் 176 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் 556 ஓட்டங்களுக்கு பதிலாக இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 492/3 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந் நிலையில் நான்காம் நாளான இன்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 658 ஓட்டங்களை குவித்துள்ளது.
ரூட் 259 ஓட்டங்களுடனும், ஹாரி புரூக் 218 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.