ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி சார்பாக, ஒலி வாங்கிச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவதற்காக ரஞ்சன் ராமநாயக்க, வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஊழல், மோசடிகள் அற்ற தூய்மையான அரசியலை மக்களுக்காக மேற்கொள்ளவே தான் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், செயற்பாட்டு அரசியலில் இவர் மீண்டும் களமிறங்கியுள்ளமையானது மகிழ்ச்சியளிப்பதாக பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முன்னணி நடிகராகவும், பாடகராகவும், இயக்குநராகவும் இலங்கை சினிமாவில் மிளிர்ந்துக் கொண்டிருப்பதோடு மட்டுமன்றி, இலங்கை அரசியலிலும் இவரது இருப்பும் வகிபாகமும் இன்றியமையாதது என்றால் அது நிச்சயம் மிகையாகாது.
அவரது திரைப்படங்கள் மட்டுமன்றி, இவரது அரசியல் செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் இன்னமும் பிரபல்யமாகவே பேசப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகளை எவ்வித ஒழிவு மறைவும் இன்றி தைரியமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஒரு சில அரசியல்வாதிகளில் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையில் உள்ளார் என்பது விசேட அம்சமாகும்.
இதுதொடர்பாக இவர் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றுக்கு வெளியிலும் ஆற்றிய உரைகள் இன்றுவரை சமூக ஊடகங்களில் பலராலும் பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பான விடயங்களை வெளிக்கொண்டுவந்த காரணத்தினாலேயே இவர் கடந்த காலங்களில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்ததோடு, சிறைக்கும் சென்று வந்தார்.
இதனையடுத்து, செயற்பாட்டு அரசியலில் இருந்தும் சிறிதுகாலம் ஓய்வில் இருந்த ரஞ்சன் ராமநாயக்க, தற்போது ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சியின் தலைவராக மீண்டும் செயற்பாட்டு அரசியலில் காலடியெடுத்துவைத்துள்ளார்.
இவர் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஒலிவாங்கிச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார். இவரது இந்த அரசியல் பிரவேசமானது இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புவதோடு, இவருக்கான பேராதரவையும் வழங்கி வருகின்றனர்.