நாட்டில் நிலவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 6 மாவட்டங்களில் 281 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல் மாகாணத்தின களுத்துறை மாவட்டத்தில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு கேகாலை மாவட்டத்தில் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ் மாவட்டத்தில் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, கொழும்பின் கொலன்னாவை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ளது.
அத்தோடு, நாட்டைச் சூழவுள்ள கடற் பரபிராந்தியங்களில் காற்றானது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.