2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை செலுத்தாமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரிய டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வெட் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் (W. M. Mendis) நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்திருந்தது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை ஏய்ப்பு செய்தமை தொடர்பிலேயே உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், டபிள்யூ.எம். மெண்டிஸ் (W. M. Mendis) நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த தீர்ப்பிற்கு எதிராக அர்ஜுன் அலோசியஸினால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட போதும் அதனை கொழும்பு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.