சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அதேநேரம், இரு பங்காளி நாடுகளுக்கு இடையேயான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், படுகொலை சதித்திட்டம் குறித்த கனடாவின் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், அதன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறும் இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
வொஷிங்டன், டி.சி.யில் செவ்வாயன்று (15) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த அழைப்பினை விடுத்தார்.
முன்னதாக திங்கட்கிழமை (14), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசாங்கம் தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.
அதேநேரம், நாட்டின் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருப்பதற்கான “தெளிவான மற்றும் வலுவான சான்றுகள்” உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பதட்டமான இந்தியா-கனடா உறவுகளுக்கு ஒரு பெரிய அடியாக உயர் ஆணையர் உட்பட ஆறு இந்திய இராஜதந்திரிகளை கனடா திங்களன்று நாட்டிலிருந்து வெளியேற்றியது.
அதேநேரம், செயல் உயர் ஆணையர் உட்பட ஆறு உயர்மட்ட கனேடிய இராஜதந்திரிகளை வெளியேற்ற உத்தரவிட்டதன் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.
அத்துடன், கனடாவின் வெளியேற்ற அறிக்கைக்கு முரணாக கனடாவில் இருந்து தனது தூதரை திரும்பப் பெற்றதாகக் கூறியது.