மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தலையிடும் என்றும், புதிய அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றதன் பின்னர், இந்த நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மிகவும் பொருத்தமான நடவடிக்கைகள் சில எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இந்தத் தேர்தல் காலத்திலும் இதன் பின்னரும் எவ்வித தேர்தல் வன்முறைகளும் இடம் பெறாதவாறு நடாத்திச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளகப் பொறிமுறை ஒன்றினூடாக செல்வாக்கு செலுத்துவதற்கு முடிந்தவரை நடவடிக்கை எடுப்பதாகவும், மிகவும் தெளிவாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன் தற்போது அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
மேலும், நாட்டின் அரசியலமைப்பு, குற்றவியல் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு இணங்க நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வழங்குவதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
அவ்வாறே எதிர்காலத்தில் அவ்வாறான செயல்கள் இடம்பெறாது தவிர்ப்பதற்கு கட்டாயமாக நடவடிக்கை எடுப்பதாகவும், சர்வதேச மனித உரிமைகள் சட்ட விதிகளைப் பயன்படுத்தி உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமைகள் தொடர்பாக செயல்படுவதற்கு தலையீடு செய்வதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார்.