கடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மத்திய-கிழக்கு இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானைச் சேர்ந்த தரம் 11 இல் கல்வி பயிலும் 17 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
ஆரம்பக் கட்ட விசாரணையில் குறித்த சிறுவனுக்கும், அவனது நண்பருக்கும் இடையே பணம் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால் அந்த சிறுவன் தனது நண்பரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் போலிக் கணக்கை பயன்படுத்தி மிரட்டல் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது, இந்த வழக்கு அண்மையில் சில விமானங்களுக்கு வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களுடன் தொடர்புடையதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு பணம் தொடர்பாக நண்பருடன் சில தகராறு இருந்ததால் இது பழிவாங்கும் சதி என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிறுவன் மற்றும் அவனது தந்தை இருவரும் விசாரணைக்காக மும்பைக்கு வரவழைக்கப்பட்டனர்.
வெடி குண்டு மிரட்டலினால் நான்கு விமானங்களில், இரண்டு தாமதமாகின, ஒன்று இரத்து செய்யப்பட்டது.
கடந்த மூன்று நாட்களில், இந்திய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 10 இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.