இன்று நடைபெறும் 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இலங்கை நேரப்படி இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஒன்பதாவது ஐசிசி 2024 மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரானது கடந்த 03 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமானது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), மேற்கிந்தியத்தீவுகள், தென்னாப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதலிரு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
முதலாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியும், 2 ஆவது அரையிறுதியில் நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இறுதிப்போட்டி டுபாயில் இன்று இரவு நடக்கிறது.
நியூசிலாந்து அணி 3 ஆவது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அதேநேரம் தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.