சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி தனது ஐபிஎல் எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் தோனி, ஐபிஎல் தொடரில் வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடுவுக்கு முன்னதாக தனது முடிவினை அறிவிப்பார் என்றும் காசி விஸ்வநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மைய அறிக்கைகளின்படி, அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக, தங்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிடுவதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸின் உயர்மட்டத் தலைவர்கள் தோனியின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி ESPNcricinfo செய்திச் சேவையுடனான உரையாடலில் மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன், தோனியிடமிருந்து எங்களுக்கு இன்னும் உறுதியான தகவல் வரவில்லை. எனினும் அவர் எங்களுக்காக தொடர்ந்து விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஐபிஎல் நிர்வாகக் குழுவும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் அனைத்து அணிகளும் தங்கள் இறுதித் தக்கவைப்பு பட்டியலை சமர்ப்பிக்க ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு, தோனி தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து, அந்தப் பொறுப்பை தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.