கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே இக்கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஜஸ்டின் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக சொந்த கட்சி அமைச்சர்கள் 24 பேர் எதிர்ப்பை வெளியிட்டனர். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது. மேலும் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியின் செல்வாக்கு சரிந்து இருப்பது தெரியவந்தது.
அடுத்த தேர்தலில் ஜஸ்டின் தலைமையிலான லிபரல் கட்சி மோசமாக தோற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜஸ்டின் மீது அமைச்சர்கள் சிலர் அதிருப்தி அடைந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். அந்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் விலக எதிர்வரும் 28ஆம் திகதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளனர்.
இதற்கிடையே லிபரல் கட்சி அமைச்சர்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் 3 மணி நேரம் நடந்தது. அப்போது ஜஸ்டின் பதவி விலக வலியுறுத்தும் கடிதம் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு ஜஸ்டின் கூறும்போது, லிபரல் கட்சி வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதாக தெரிவித்தார்