முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர்,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு விசேட பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் அமைச்சராக அவர் முன்னர் பதவி வகித்ததன் காரணமாக, நீதிவான் அவரது விசேட பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை இந்த உத்தரவில் உள்ளடக்கியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அன்றிரவு, நுகேகொடை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை சிறைச்சாலை வைத்தியசாலையின் சுகாதார அறிக்கை சுட்டிக்காட்டியதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.