2024 ஒக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி (Noman Ali) வென்றுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிராக 2-1 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை த்ரில் வெற்றிபெற பாகிஸ்தானுக்கு உதவுவதில் நோமன் முக்கிய பங்கு வகித்தார்.
இடது கை வீரர் இரண்டு டெஸ்ட் போட்டி வெற்றிகளில் 13.85 சராசரியில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் ஆகியோருடனான பலத்த போட்டிக்கு மத்தியில் நோமன் அலி இந்த விருதினை வென்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பாபார் அசாம் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றார்.
அதன் முன்னர் குறித்த விருதினை வெல்லும் முதல் பாகிஸ்தான் வீரர் நோமன் அலி ஆவார்.
இதேவேளை, 2024 ஒக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை நியூசிலாந்தின் நட்சத்திர சகலதுறை வீராங்கனை மெலி கெர் (Melie Kerr) வென்றார்.
தென்னாப்பிரிக்க மகளிர் அணித் தலைவர் லாரா வோல்வார்ட் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் டியான்ட்ரா டோட்டின் ஆகியோருடனான போட்டிக்கு மத்தியில் அவர் இந்த விருதினை வென்றார்.
மெலி கெர் ஒக்டோபர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நியூசிலாந்தின் முதல் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.
மெலி கெர் இந்த விருதினை வெல்வது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்னர் அவர் 2022 பெப்ரவரியில் குறித்த விருதினை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.