10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) இன்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரன்வலவின் பெயரை முன்மொழிந்ததோடு அதனை வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். அதன்படி, சபாநாயகராக அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் ” நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் தான் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகமை
அசோக சபுமல் ரன்வல பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற அவர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
அரசியல் வாழ்கை
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அசோக ரன்வல,பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார் .
அது மட்டுமல்லாது பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியிருந்தார். மேலும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர் அக்கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 1,09,332 விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் விருப்புப் பட்டியலில் ஆறாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.