16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் ஒரு புதிய சட்டமூலத்தை அவுஸ்திரேலியாவின் மத்திய-இடதுசாரி அரசாங்கம் வியாழனன்று (21) அறிமுகப்படுத்தியது.
இந்த முன்மொழியப்பட்ட சட்டம், உலகளவில் மிகவும் கடினமான ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி எக்ஸ், டிக்டொக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சிறுவர்கள் கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கத் தவறினால், 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ($32.5m) வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆளும் தொழிலாளர் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தாராளவாதிகளின் ஆதரவைக் கொண்ட இந்த சட்டமூலம், பெற்றோரின் சம்மதம் அல்லது முன்பே இருக்கும் கணக்குகளுக்கு விலக்கு அளிக்காது.
இது சட்டமாக மாறிய பின்னர், வயது வரம்பை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறிய தளங்களுக்கு ஒரு வருடம் அவகாசம் வழங்கப்படும்.
சமூக ஊடக தளங்களில் சிறுவர்களின் அணுகலை பல நாடுகள் கடுமையாக்கியுள்ளன.
ஸ்பெய்ன் கடந்த ஜூன் மாதம் ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்தது, இது சமூக ஊடக அணுகலுக்கான தற்போதைய வயது வரம்பை 14 முதல் 16 ஆக உயர்த்தியது, இது பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் செயல்படுகிறது.
பிரான்ஸ் கடந்த ஆண்டு 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முன்மொழிந்தது, ஆனால் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது.
மேலும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளை திறக்க தடை விதிக்கப்படும் சட்டம் அறிகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய சட்டம் எதிர்வரும் ஜனவரி முதல் அமுலுக்கு வரும்.