2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில் இன்று ஆரம்பமாகிறது.
10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பமாகி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன.
இந் நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட பின்னர் மொத்தமாக 201 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அதிகபட்சமாக 110.5 கோடி இந்திய ரூபாவுடனும், ராஜஸ்தான் ரோயல்ஸ் குறைந்தபட்சமாக 41 கோடி இந்திய ரூபாவுடனும் ஏலத்தில் பங்கெடுக்கின்றது.
42 வயதுடைய இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏலத்தில் உள்ள அதிக வயதுடைய வீரராக உள்ளமையும் குறிப்பிடதக்கது.