இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ” கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பெளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டியாகும்.
சென்ற வருடம் முதலாவது போட்டியை மிகச் சிறப்பாக யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தி இருந்தது. இப் போட்டியானது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்கள் சர்வதேச தரத்தை அதிகரித்துக் கொள்ள உதவுவதோடு பல சதுரங்க வீரர்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கின்றது.
போட்டியின் இன்றைய தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன் கலந்து கொண்டார்.
லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனம் மற்றும் வெளிநாடு, உள்நாட்டில் வசிக்கின்ற நலன் விரும்பிகளின் நிதி பங்களிப்புடன் சிறப்பாக இந்த சதுரங்க போட்டி நடைபெறுகின்றது.