சிரியாவின் மத்திய நகரமான ஹோம்ஸை கிளர்ச்சிப் படைகள் “முழுமையாக விடுவித்துள்ளதாக” சிரியவின் கிளர்ச்சியாளர் தளபதி ஹசன் அப்துல் கானி (Hassan Abdul Ghany) ஞாயிற்றுக்கிழமை (08)அதிகாலை தெரிவித்தார்.
மேலும், இது ஒரு வரலாற்று தருணம் என்றும் அவர் அழைத்தார், அத்துடன், ஆயுதங்களை கைவிடுபவர்களுக்கு எதுவித தீங்கும் செய்ய வேண்டும் என்று தனது போராளிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் ஹோம்ஸ் இராணுவச் சிறையிலிருந்து 3,500 கைதிகளை விடுவித்ததாகக் கூறினர், அதன் காணொளிக் காட்சிகளை தங்கள் டெலிகிராம் அலைவரிசையில் வெளியிட்டனர்.
சிரிய அரசாங்கப் படைகள் ஒரு நாள் சண்டையின் பின்னர் சனிக்கிழமையன்று முக்கிய நகரமான ஹோம்ஸைக் கைவிட்டதுடன், கிளர்ச்சியாளர்களும் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 24 ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராக இருந்த ஜனாதிபதி பஷர் அசாத் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அதேநேரம், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் விமானத்தில் ஏறி டமாஸ்கஸில் இருந்து வெளியேறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானம் அசாத்தை ஏற்றிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்த அரசுப் படையினர் விமானம் புறப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
கிளர்ச்சிப் படைகள் சிரியாவின் தலைநகருக்குள் நுழையத் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சிரியாவின் மத்திய நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், இளைஞர்கள் சிரிய ஜனாதிபதியின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோம்ஸின் வீழ்ச்சி சிரியாவின் மூலோபாய மையப்பகுதி மற்றும் ஒரு முக்கிய நெடுஞ்சாலை குறுக்கு வழியில் கிளர்ச்சியாளர்களுக்கு கட்டுப்பாட்டை அளித்துள்ளது.
ஹோம்ஸின் கைப்பற்றலானது 13 ஆண்டுகால மோதலில் கிளர்ச்சி இயக்கத்தின் வியத்தகு மறுபிரவேசத்தின் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த கடுமையான முற்றுகைப் போரினால் ஹோம்ஸ் பகுதி அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.